சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் S9 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச நுகர்வோர் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
2018-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி S9 சீரிஸ் விற்பனை ஏப்ரல் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒவ்வொரு நிறுவனமும் தனது ஃபிளாக்ஷிப் சாதனங்களை அறிமுகம் செய்வது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.
கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தென் கொரியாவை சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இதே தேதியில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் பிப்ரவரி 26-ம் தேதி வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 26-ம் தேதி துவங்கி மார்ச் 1-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஐபோன் X தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விட ஒரு மாதம் முன்னதாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, முறையே 5.8 மற்றும் 6.2 இன்ச் அளவு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் அமெரிக்காவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், சர்வதேச சந்தையில் எக்சைனோஸ் 9810 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.