செய்திகள்

6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி S8+ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மாலை மலர்

புதுடெல்லி: 

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்த கேலக்ஸி S8+ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டுள்ள புதிய S8+ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

இந்திய விற்பனையை முன்னிட்டு இந்திய சந்தையில் ரூ.4,499 மதிப்புடைய வயர்லெஸ் சார்ஜர் ஒன்றை சாம்சங் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. புதிய மாடல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது, சாம்சங் விற்பனை மையங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு வாங்குவோருக்கு ரூ.2,500 கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் எக்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ டபுள் டேட்டா சலுகையை (28 ஜிபி + 28ஜிபி) ரூ.309க்கு வழங்குகிறது. ஏப்ரல் மாதத்தில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன்களை முறையே ரூ.57,900 மற்றும் ரூ.64,900 விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன. இவற்றில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் QHD+1440x2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவும், S8+ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் QHD+1440x2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. இவை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தையில் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என்றும் இதர சர்வதேச சந்தைகளில் (இந்தியா உட்பட) எக்சைனோஸ் 8895 குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் தகவல்களை பாதுகாக்க ஏதுவாக கைரேகை ஸ்கேனர் மட்டுமின்றி, கண்களை கொண்டே சாதனத்தை பாதுகாக்கும் ஐரிஸ் ஸ்கேனர் வசதிகளுடன், டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், S8+ ஸ்மார்ட்போனில் 3500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.