லாஸ் வேகாஸ்:
சாம்சங் நிறுவனத்தின் 2018 முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீடு சார்ந்த அதிகாரப்பூர்வ தகவலை சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ அறிவித்துள்ளார்.
அதன்படி சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2018) விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ள நிலையில், ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் என இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன்களின் கேமரா வன்பொருள் அம்சங்களில் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் டூயல் கேமரா லென்ஸ் வழங்காமல் இம்முறை ஒற்றை கேமரா யூனிட் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
மேலும் புதிய ஸ்மார்ட்போன்களின் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளேவினுள் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் எக்சைனோஸ் 9810 சிப்செட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு தாமதமாகாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.