சென்னை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடைவிதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், வெளி மாநிலத்தவர்கள் பட்டாசுக்கு ஆர்டர் கொடுக்காமல் வழக்கின் முடிவுக்காக காத்திருப்பதால் சிவகாசியில் பட்டாசுகளை உற்பத்தி செய்யாமலும், அப்படி உற்பத்தி செய்தாலும் பட்டாசுகளை விற்கமுடியுமா? என்ற குழப்ப நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி. பாதிப்பு, சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் போன்ற பலவற்றை தீர்க்கக்கோரியும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களும், அதனை சார்ந்த தொழில் செய்வோரும், லட்சக்கணக்கானத் தொழிலாளர்களும் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடபட்டால் லட்சக்கணக்கான குடும்பங்கள் வேலை இழந்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் பட்டாசு தொழிலை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.