செய்திகள்

உ.பி. சுகாதாரத் துறை மந்திரி வீட்டில் முட்டைகள் வீசி சமாஜ்வாடி தொண்டர்கள் போராட்டம்

உத்தரப்பிரதேசம் மாநில சுகாதாரத் துறை மந்திரி வீட்டின் மீது முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீசி சமாஜ்வாடி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆறு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோரக்பூர் சம்பவத்தை கண்டிக்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான சித்தார்த் நாத் சிங் வீட்டின் முன்பு சமாஜ்வாடி தொண்டர்கள் ஒன்று திரண்டனர்.

அவர்கள் தாங்கள் கைகளில் வைத்திருந்த முட்டைகள் மற்றும் தக்காளிகளை அவரது வீட்டின் மீது வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் மந்திரிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.