செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் காவி நிறத்துக்கு மாறும் தலைமை செயலக கட்டிடம்: சமாஜ்வாடி கட்சி கண்டனம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தலைமைச் செயலக கட்டிடத்திற்கு காவி வர்ணம் தீட்டப்பட்டு வருவதற்கு சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து கோரக்பூர் மடாதிபதியும் அந்த தொகுதி எம்.பி.யாக இருந்தவருமான யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

அவரது ஆட்சியில் இந்து மயம் ஆகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த மாதம் மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டன.

அதன் பிறகு எரிசக்தி துறையும், மின் வாரிய குடியிருப்புகளும், மின்சார கம்பங்களும், மக்கள் தொடர்புத் துறை அலுவலகங்களும் மஞ்சள் நிறத்துக்கு மாறின. காவி நிறத்தை குறிக்கும் வகையில் அரசு கட்டிடங்களில் மஞ்சள் நிற வர்ணம் தீட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் லக்னோவில் உள்ள தலைமைச் செயலக கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள பல்வேறு துறை களின் அலுவலக கட்டிடங்கள் காவி கலரில் வர்ணம் தீட்டப்பட்டு வருகின்றன.

இங்குள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் மற்றும் மந்திரிகளின் அலுவலக கட்டிடங்களும் காவி நிறத்துக்கு மாறி வருகிறது.

இதுபற்றி தலைமை செயலக கட்டிட நிர்வாக அதிகாரி யோகேஷ்குமார் சுக்லா கூறுகையில், தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலக கட்டிடங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டிடத்துக்கு என்ன பெயிண்டிங் அடிக்கலாம் என்பதை முதல்-மந்திரி, தலைமை செயலாளர் ராஜீவ் குமார், நகர்ப்புற வளர்ச்சித் துறை மந்திரி சுரேஷ்கன்னா ஆகியோர் தேர்வு செய்தனர். ஒவ்வொருவரது விருப்பப்படிதான் வர்ணம் தீட்டப்படுகிறது என்றார்.

அரசு கட்டிடங்களுக்கு என்ன கலர் பெயிண்டிங் அடிக்க வேண்டும் என்பதை மாநில அரசு தேர்வு செய்வது இதுவே முதல் முறையாகும் என்று தலைமைச் செயலக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்திரி கூறுகையில், பா.ஜனதா அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது, இது அரசியல் ரீதியான முடிவு என்று குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT