சேலம்:
சேலம் மாவட்டத்தில் 26 மையங்களில் நேற்று ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த மாணவி ஜீவிதா, சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள சவுடேஸ்வரி கல்லூரிக்கு ‘நீட்’ தேர்வு எழுத வந்தார். அவருடைய நுழைவுச்சீட்டில் தேர்வு மையம் சவுடேஸ்வரி கல்லூரி என்றும், பதிவு எண் (சென்டர் கோடு) கேரள மாநிலம் கோட்டயம் என்றும் இருந்தது. இதனால் அந்த மாணவியை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அப்போது ஜீவிதா, “நான் சரியாகத்தான் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். நுழைவு சீட்டில் குழப்பம் ஏற்பட்டது உங்களது கவனக்குறைவு. என்னை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறினார். இருப்பினும், அந்த மாணவியை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதுபற்றி அறிந்த மற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர் திடீரென தேர்வு மைய கெடுபிடிகளை கண்டித்து சாலை மறியலுக்கு முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஜீவிதா கண்ணீருடன் தேர்வு எழுத முடியாமல் திரும்பி சென்றார்.