செய்திகள்

சேலத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

சேலத்தில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் டேனியல். இவரது மனைவி ரோஸ் (வயது 47). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சேலத்திற்கு வந்தனர்.

பின்னர் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர். மோட்டார் சைக்கிள் சேலம் ஜங்சனை அடுத்த புது ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர்களை வழி மறித்தனர். திடீரென அதில் ஒரு நபர் ரோஸ் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டனர். ஆனால் மர்ம நபர்கள் 2 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஸ் கதறிய படியே சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் இந்த சாலையில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.