குண்டு வீச்சில் சேதமான கார்-மோட்டார் சைக்கிள் 
செய்திகள்

சேலத்தில் நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சேலத்தில் நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் குமாரசாமிப்பட்டி ராம்நகரில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி வீடு உள்ளது.

இவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்மக்கும்பல் வந்து பெட்ரோல் குண்டு வீசியது.

அப்போது செல்வ கணபதியின் மகன் அரவிந்த சாமி மருமகள் சுகன்யா ஆகியோர் இருந்தனர். அவர்கள் வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் நடந்த போது செல்வகணபதி வீட்டில் இல்லை. அவர் நேற்று மாலை சென்னை புறப்பட்டு சென்றிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவர் உடனடியாக சேலம் வந்தார். இன்று காலை தடவியல் நிபுணர்கள் வந்து பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.

செல்வகணபதியிடம் நடந்த சம்பவம் குறித்து தொண்டர்கள் விசாரித்த காட்சி.

செல்வ கணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது யார்? என்று தெரியவில்லை. தி.மு.க.வில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசிப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் அரிசிபாளையம் பகுதியில் உள்ள 27-வது வார்டில் நேற்று டி.எம்.செல்வ கணபதி தலைமையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடை பெற்றது.

அப்போது வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் பகுதி செயலாளர் பிரகாஷ் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து செல்வகணபதி ஆதரவாளர்களிடம் வாக்கு வாதத்தில ஈடுபட்டனர். அது கைகலப்பாக மாறியது.

செல்வகணபதி வீட்டின் முன்பு  திரண்ட பொதுமக்கள்

இரண்டு தரப்பினரையும் சேர்ந்த சுரேஷ்குமார், வரதன் ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்தது. பிரகாஷ், வினோத்குமார் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக செல்வகணபதி வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

செல்வ கணபதி வீட்டின் முன்பு நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய தகவல் பரவியதால் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் செல்வகணபதியின் வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செல்வ கணபதி நிருபர்களிடம் கூறும்போது:-

தி.மு.க.வில் தீவிர உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. இதில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய வேகமான இயக்கப்பணி பிடிக்காத சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்?

இதுகுறித்து கட்சியின் தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளேன். இதுபோன்ற செயல்களால் என்னை யாரும் மிரட்ட முடியாது. மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன். இந்த சம்பவம் கண்டனத்துக்குரியதாகும். தொடர்ந்து இயக்கப் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.