செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்- லாரி டிரைவரை கொன்ற விவசாயி கைது

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி டிரைவரை கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

மேட்டூர்:

சேலம் மாவட்டம் கொளத்தூர் மூலக்காடு அடுத்த விராலிகாடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 45). லாரி டிரைவர். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஆனால், சில ஆண்டுகளில் கலையரசி பிரிந்து சென்று விட்டார். இவர்களது மகள் அபிநயா விராலிகாட்டில் உள்ள ரவியின் தாய் பொன்னாத்தா பராமரிப்பில் வளர்ந்தார். அபிநயா 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

நேற்று முன்தினம் இரவு ரவி தன் வீட்டிலுள்ள வராண்டாவில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை சுமார் 2 மணிக்கு தலையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் ரவியை கம்பியால் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மாயமாகி விட்டார். ரவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரவி வீட்டின் அருகே வசித்து வருபவர் நாச்சிமுத்து (52). விவசாயி. இவருக்கு சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய வேலை செய்து வருகிறார். மேலும் விவசாய வேலை இல்லாத நேரங்களில் லாரி டிரைவர் வேலைக்கு சென்று வருவார்.

இந்த நிலையில் இவரது மனைவிக்கும், ரவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த நாச்சிமுத்து, இரும்பு கம்பியால் அடித்து ரவியை கொலை செய்தார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாச்சிமுத்துவை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியும் பறிமுதல் செய்யப்பட்டது.