கைது 
செய்திகள்

சேலம் அருகே செல்போன் பறித்த 2 பேர் கைது

சேலம் அருகே செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர், நேற்று முன்தினம் சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகில் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம், தனது நண்பரிடம் பேச வேண்டும் எனக்கூறி செல்போனை கேட்டுள்ளனர். இதனால் சாதிக் பாஷா தனது செல்போனை கொடுத்தார். பின்னர் அவர்கள் செல்போனை வாங்கிக் கொண்டு அங்கிருந்து திடீரென புறப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாதிக்பாஷா அவர்களை துரத்தி பிடிக்க முயன்றார். ஆனால் அந்த மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த ஒருவரை மட்டும் அப்பகுதி பொதுமக்கள் பிடித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சேலம் கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 20 ) என்பதும், அவரது கூட்டாளியான கோட்டையை சேர்ந்த லியாண்டர் என்பவருடன் சேர்ந்து செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கோட்டை பகுதியில் பதுங்கி இருந்த பிரகாஷ் கூட்டாளியான லியாண்டரை போலீசார் கைது செய்தனர் பின்னர் அவர்களிடம் இருந்து செல்போனை மீட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.