சேலம்:
சேலத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு ஆத்தூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, எடப்பாடி வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, சங்ககிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த காய்கறிகள் வரத்து எதிர்பார்த்தை விட தற்போது அதிகரித்துள்ளதால் அதன் விலை படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. குறிப்பாக கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ் விலை படிப்படியாக குறைந்து இன்று 24 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரம் 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி விலையும் குறைந்து இன்று 7 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி விலை குறைந்துள்ளதால் தள்ளு வண்டிகளில் வைத்தும் தெரு தெருவாக தக்காளி பழங்களை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
கடந்த வாரம் 12 ரூபாய்க்கு விற்ற முள்ளங்கி விலையும் சரிந்து இன்று 7 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் மருத்துவ குணம் நிறைந்த முள்ளங்கியை பொது மக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.
சின்னவெங்காயத்தின் விலை கடந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ 180 ரூபாயாக இருந்ததால் வெங்காய விலையை கேட்டாலே பொதுமக்களின் கண்களில் கண்ணீர் வந்தது.
பின்னர் படிப்படியாக சரிய தொடங்கிய சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரம் 80 முதல் 85 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது மேலும் குறைந்து 70 முதல் 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. கத்தரிக்காய் விலை சற்று குறைந்து இன்று ஒரு கிலோ ரூ.24-க்கும், தேங்காய் விலையும் கிலோவுக்கு 2 ருபாய் குறைந்து ரூ. 48-க்கும் விற்கப்பட்டது.
கடல் மீன்களில் சில மீன்களின் வரத்து மட்டும் தற்போது குறைந்துள்ளது. அதனால் அந்த மீன்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 340 ரூபாய்க்கு விற்ற பாறை மீன் இன்று 400 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற லேடீஸ் பிங்கர் மீன் தற்போது 380 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற வெளமீன் 350 ரூபாயாகவும் உயர்ந்திருந்தது.
கடந்த மாதம் 600 ரூபாய்க்கு விற்ற வஞ்சிரா மீன் விலை சற்று குறைந்து இன்று 550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கட்லா மீன் கிலோ 170 ரூபாய்க்கும், கிளாத்தில் மீன் 180 ரூபாய்க்கும், லோகு மீன் 160 ரூபாய்க்கும் கடந்த மாத விலையிலேயே விற்பனையானது.
கடந்த மாதம் 470 முதல் 480 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ மட்டன் விலை படிப்படியாக உயர்ந்து இன்று 500 முதல் 520 ரூபாய் வரை விற்பனையானது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மேலும் விலை உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.