செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டீன் அலுவலகம் முன்பு எம்.பி.ஏ. பட்டதாரி தீக்குளிப்பு

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகம் அருகே எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் தீக்குளித்தார்.

சேலம்:

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகம் அருகே இன்று பகல் 1 மணிக்கு வாலிபர் ஒருவர் உடலில் தீ எரிந்த நிலையில் ஓடி வந்தார். அவரை பார்த்ததும் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.

ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓடி வந்து மண்ணை அள்ளி போட்டு தீயை அணைக்க முயன்றனர். என்றாலும் அவரது உடல் கருகியது. 90 சதவீத அளவுக்கு அவரது உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரது கண் பிதுங்கி வெளியே வந்து விட்டது.

அவர் சரிந்து கீழே விழுந்தார். தீக்காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிறிது நேரம் கதறிய அவர் பின்னர் மயங்கி உணர்வற்று விழுந்தார். உடனடியாக அந்த வாலிபரை ஊழியர்கள் மீட்டு தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சேலம் அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். அந்த வாலிபரின் பெயர் மோகன் வயது 35 என்பதும், சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் மகன் என்பதும் தெரியவந்தது. அவர் என்ன காரணத்துக்காக தீக்குளித்தார் என்றும் தெரியவில்லை. அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரிடம் தீக்குளித்த வாலிபர் மோகன் கூறியதாவது:-

நான் எம்.பி.ஏ. படித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். எனக்கு 2 மாதமாக வேலை இல்லை. எனக்கு 2 தம்பிகளும், ஒரு சகோதரியும் உள்ளனர். எங்கள் குடும்பத்தில் சொத்து பிரச்சினை இருந்தது.

நான் தீக்குளித்தால் என்னை மற்றவர்கள் காப்பாற்றி விடுவார்கள் என்றும், சொத்து பிரச்சினை தீர்ந்து விடும் என்றும் நினைத்தேன். இதற்காகத்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தீக்குளித்தேன். ஆனால் உடல் முழுவதும் தீ பரவி விட்டது.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரில் வந்தபிறகு தான் மோகன் என்ன காரணத்திற்காக தீக்குளித்தார் என்பது தெரியவரும். அவர் மண்எண்ணை அல்லது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தாரா? என்பது தெரியவில்லை. #tamilnews

SCROLL FOR NEXT