சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்திற்கு உட்பட்ட காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் இன்று காலை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி எல்லோரையும் உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதிக்க முடியாது. 5 பேர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்க முடியும் என்று கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் நுழைவு வாயில் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். நிலம் எடுக்காதே, நிலம் எடுக்காதே, விவசாய நிலங்களை எடுக்காதே... பாதிக்கப்படும், பாதிக்கப்படும், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்... என கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து சேலம் தாசில்தார் மகுடீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்களுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்பது குறித்து விரிவான அறிக்கை தர வேண்டும் என்றனர்.
அதற்கு அதிகாரிகள், நீங்கள் எல்லோரும் அமைதியான முறையில் மனுவை கொடுத்து விட்டு செல்லுங்கள். நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
இந்த சமாதான பேச்சு வார்த்தையை ஏற்று தாங்கள் கொண்டு வந்த 2 மனுக்களை வரிசையாக நின்று விவசாயிகளும் பொதுமக்களும் அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதில் ஒரு மனுவை அதிகாரிகள் பெற்றுக் கொண்டும் மற்றொரு மனுவில் சீல் வைத்து அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
அவர்கள் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் விவசாய நிலங்களில் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம்.
இந்த நிலையில் எங்கள் 4 கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்த அரசு முயற்சித்து வருவது விவசாய நிலங்களையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக உள்ளது.
அரசு சுமார் 570 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் சிறு, குறு விவசாயிகள்.
எங்களுக்கு விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாது. இக்கிராமங்களில் உள்ள நிலங்கள் அனைத்தும் அமோக விளைச்சல் உள்ள நீர்பாசன வசதியுள்ள விவசாய நிலங்களாகும்.
இத்தகைய சூழ்நிலையில் எங்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
ஏற்கனவே கையகப் படுத்திய நிலங்களுக்குரிய நியமான இழப்பீடு தொகையையும், வேலை வாய்ப்பினையும் தரவில்லை. எனவே கலெக்டர் எங்களின் கோரிக்கையினை ஏற்று நில ஆர்ஜிதம் செய்வதை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.