செய்திகள்

5-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: மாணவ- மாணவிகள் கடும் பாதிப்பு

சேலத்தில் 5-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. வாகனங்கள் பாதிக்கும் மேல் ஓடாததால், இதனால் மாணவ-மாணவிகள் பரிதவிப்புக்குள்ளாகினர்.

மாலை மலர்

சேலம்:

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் கடந்த 4-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டத்தால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து தற்காலிக டிரைவர்களை வைத்து குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சில இடங்களில் விபத்துகளால் உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 13 டெப்போக்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். தற்போது டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மாநகரில் டவுன் பஸ்கள் 60 சதவீதமும், புறநகர பஸ்கள் 35 சதவீதமும் இயக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள பஸ்கள் அந்தந்த டெப்போக்களில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தையொட்டி கிராமப்புறங்களுக்கு மிக குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் கிராம புறங்களில் இருந்து நகர பகுதிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலக வேலைக்கு செல்வோர் 5-வது நாளாக இன்றும் பரிதவிப்புக்குள்ளாகினர்.

அரசு விரைவு பேருந்துகளும் குறைந்த அளவே இயங்கியதால் ஆம்னி பஸ்கள் பகலில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வேறு வழியில்லாமல் அதிக கட்டணம் கொடுத்து தொலை தூரங்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள். தனியார் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டதால் அந்த பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்றிரவு சென்னை, கோவை, பெங்களூரு உள்பட பெரு நகரங்களுக்கு செல்வோர் பஸ் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர். மேலும் பலர் பஸ்கள் ஓடுமா, ஓடாதா? என்ற அச்சத்தில் வெளியூர் பயணங்களை ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையே சேலம் கோட்டத்தில் பணிக்கு வராத டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட 2500 ஊழியர்களுக்கு சேலம் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் சம்பந்தப்பட்ட உழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் அல்லது பணிக்கு வராதது குறித்து ஒரு வாரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.