உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்தது. இந்த தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பானின் நயோமி ஒகுஹராவுடன் மோதினார். இப்போட்டியில், 21-12, 17-21, 10-21 என்ற செட்கணக்கில் சாய்னா தோல்வியடைந்தார்.
கடந்த முறை நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற சாய்னா, இந்த முறை வெண்கலப்பதக்கத்துடன் வெளியேற நேர்ந்தது. அதேசமயம் கோபிசந்திடம் பயிற்சி பெற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதையடுத்து, 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெங்களூரில் விமல் குமாரிடம் பயிற்சி பெற்றுவந்த சாய்னா, தற்போது ஐதராபாத்தில் கோபிசந்திடம் பயிற்சி பெற முடிவெடுத்துள்ளார். சாய்னாவின் இந்த முடிவு பேட்மிண்டன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-
கோபிசந்த் அகாடமியில் மீண்டும் பயிற்சி பெற முடிவெடுத்துள்ளேன். இதுகுறித்து கோபிசந்த் அவர்களிடம் பேசினேன். எனக்கு பயிற்சியளிக்க முன்வந்த அவருக்கு நன்றி. என் பேட்மிண்டன் வாழ்க்கையின் இந்த காலக்கட்டத்தில் என் குறிக்கொள்களை நிறைவேற்ற அவர் உதவுவார் என எண்ணுகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு உதவியாக இருந்த விமல் அவர்களுக்கும் நன்றி. உலகின் முதல்தர வீராங்கனையாக எனக்கு அவர் பெரிதும் உதவியுள்ளார். 2015, 2017ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு பதக்கங்களையும் பல சூப்பர் சீரிஸ் பட்டங்களையும் வெல்ல விமல் உதவியுள்ளார். மீண்டும் ஐதராபாத்திற்கு திரும்பியுள்ளேன். அனைவரும் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சாய்னாவின் இந்த முடிவிற்கு கோபிசந்த வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சிறு வயதில் இருந்து அவருக்கு பயிற்சி அளித்துள்ளேன். அகாடமிக்கு திரும்ப அவர் விரும்புகிறார். அவர் மேலும் நன்றாக விளையாட உதவுவேன்”, என அவர் கூறினார்.