செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பின் மாநிலங்களவையில் டெண்டுல்கர்: கருணையின்றி கலாய்த்த நெட்டிசன்ஸ்

நியமன எம்.பி.யாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் நீண்ட நாட்களுக்கு பின் நேற்று மாநிலங்களவைக்கு வருகை தந்துள்ளதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவையில் நியமன எம்.பி.யாக உள்ளார். இதற்கு முன் நடந்த பல கூட்டத்தொடர்களில் சச்சின் கலந்து கொண்டதில்லை. நியமன எம்.பி.க்களிலேயே சச்சினுக்கு மட்டும் தான் வருகைப்பதிவு மிகக் குறைவாக உள்ளது.

நேற்று முன்தினம் நியமன உறுப்பினர்களின் வருகை குறித்து சமாஜ்வாடி கட்சியின் நரேஷ் அகர்வால் அவையில் கேள்வியெழுப்பினார். இதனையடுத்து, நேற்று அதிரடியாக சச்சின் டெண்டுல்கள் மாநிலங்களவையில் நடவடிக்கைகளில் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார்.

அவை நடவடிக்கைகளில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு அவர் வெளியே சென்றுவிட்டார். கேள்விகள் எதும் எழுப்பவில்லை. இந்நிலையில், மாநிலங்களவையில் அவர் அமர்ந்திருந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானதும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலாக மீம்ஸ்களை வெளியிட்டனர்.

‘குறைவான வருகைப் பதிவு உள்ள மாணவர்கள் கடைசி நேரத்தில் வேறு வழியின்றி வகுப்புக்கு வருவது போல சச்சின் வந்துள்ளார்’ என பலர் கலாய்த்துள்ளனர். மேலும், சிலர் ‘திரைப்படங்களில் கவுரவத்தோற்றம் அளிக்கும் நடிகர் போல, மாநிலங்களவையில் சச்சின் தோற்றமளித்துள்ளார்‘ என ட்வீட் செய்துள்ளனர்.

இதனால், நேற்று முதலே சச்சின் டெண்டுல்கரின் மாநிலங்களவை விசிட் செய்தி டாப் டிரெண்டிங் அடித்து வருகிறது.