செய்திகள்

‘விளையாட்டை நேசித்தது போதும், விளையாடுங்கள்’: ராஜ்யசபா உரையை பேஸ்புக்கில் வெளியிட்ட சச்சின்

இந்தியா விளையாட்டை நேசிக்கும் தேசத்தில் இருந்து விளையாட்டுக்களை விளையாடும் தேசமாக மாற வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தனது ராஜ்யசபா உரையை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

2012-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இதுவரை அவையில் உரையாற்றியது இல்லை. இந்நிலையில், நடப்பு கூட்டத்தொடரில் அவர் நேற்று உரையாற்ற இருந்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று சச்சின் தனது உரையை வாசிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அவைக்கு வரவில்லை. மாறாக தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அவையில் பேச இருந்த உரையை வாசித்தார்.

வடகிழக்கு இந்தியாவில் விளையாட்டு துறையை வெகுவாக பாராட்டிய சச்சின் தெண்டுல்கர் “இந்தியா விளையாட்டை நேசிக்கும் தேசத்தில் இருந்து விளையாட்டுகளை விளையாடும் தேசமாகவேண்டும், எல்லோரும் செயல்பட வேண்டும், விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொள்ள வேண்டும், கற்பிக்கப்படவேண்டும், நம்முடைய தேசத்தில் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும்”என குறிப்பிட்டு உள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகிறது என்பதற்கு தீபா கர்மாகர், மேரிகோம், மிராபி சானு உள்ளிட்டோரை குறிப்பிட்டு பாராட்டினார். 

“இந்தியாவில் வெறும் 4 சதவித மக்கள் தொகையை மட்டுமே வடகிழக்கு மாநிலங்கள் கொண்டு உள்ளது, துடிப்பான விளையாட்டு கலாச்சாரத்தை கொண்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவிற்கு பல விளையாட்டு நட்சத்திரங்களை கொடுத்து உள்ளது, மேரிகோம், மேரி கோம், சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்ற மீராபாய் சானு, தீபா கர்மாகர், பாய்ச்சுங் பூட்டியா(முன்னாள் கால்பந்து அணி கேப்டன்), சரைதா தேவி, சஞ்சித சானு மற்றும் பலரை வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவிற்கு கொடுத்து உள்ளது,” 

இந்தியா விளையாட்டை நேசிக்கும் தேசத்தில் இருந்து விளையாட்டுகளை விளையாடும் தேசமாக வேண்டும் என்பதற்கு இது என்னுடைய முயற்சியாகும். இந்த நடவடிக்கையில் நீங்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என உங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன், என்னுடைய மற்றும் நம்முடைய கனவை நினைவாக்க உதவிசெய்யுங்கள், கனவுகள் நினைவாகும்! ஜெய் ஹிந்த்! என சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டு உள்ளார்.