செய்திகள்

காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி என்கவுண்டர் எதிரொலி - பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்

காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டுவந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி சப்ஸார் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதால் அங்கு பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதி சப்ஸர் பாட் உயிரிழந்தார். இந்நிலையில் பாட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் தெற்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் வன்முறைகளை தடுக்கவும் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனந்த்நாக், புல்வாமா, சோபியான் நகரங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. 

வதந்தியை தடுப்பதற்கு இந்தப்பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நாளை திங்கள்கிழமை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிவினைவாதிகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.