செய்திகள்

சபரிமலையில் மண்டல பூஜை: தென்மாநில முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம்

சபரிமலையில் மண்டல பூஜை குறித்து தென் மாநில முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் வருகிற 13-ந்தேதி நடக்கிறது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திரள்வார்கள்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும்.

இதைதொடர்ந்து சபரி மலை வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தீவிரமாக நடை பெற்றது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்கூட்டியே பக்தர்களின் அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு தமிழக, ஆந்திர, கர்நாடக மாநில பக்தர்கள் அதிகளவு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதைதொடர்ந்து தென் மாநில முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் வருகிற 13-ந்தேதி பகல் 12 மணிக்கு நடக்கிறது.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். மேலும் கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்-மந்திரிகளும் அறநிலையத்துறை அமைச்சர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது.