செய்திகள்

ஆர்எஸ்எஸ் தொண்டர் தீக்குளித்து உயிரிழப்பு: கேரளாவில் இன்று பாஜக பந்த்-கடைகள் அடைப்பு

திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து இறந்ததையடுத்து, கேரளாவில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #KeralaBJPBandh #SabarimalaIssue

சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பந்தல் அமைத்து பா.ஜனதா கட்சியினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று அதிகாலை வேணுகோபாலன் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போராட்ட பந்தலின் முன்பு ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷம் எழுப்பியபடி தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

வேணுகோபாலன்

சபரிமலை போராட்ட விவகாரத்தில் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததை கண்டித்து இன்று மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன. பாஜகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள பல்கலைக்கழக மற்றும் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.