செய்திகள்

பெண்கள் நுழைய தடை: ‘அமர்வில் 50 சதவீதம் பெண் நீதிபதிகள் இருக்க வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்

சபரிமலையில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை அமர்வில் 50 சதவீதம் பெண் நீதிபதிகள் இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

புதுடெல்லி:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு 5 முக்கிய கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு தீர்வு காண வழக்கை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நேற்று பரமேஸ்வரன் நம்பூதிரி சார்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் “இந்த பிரச்சினையை பெண்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எனவே 50 சதவீதம் பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது சிறப்பு ஜூரி (நடுவர்) விசாரணைக்கு அனுப்ப வேண்டும். சிறப்பு நடுவர்களாக சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளின் ஓய்வு பெற்ற நீதிபதிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்களை நியமிக்கலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் இதில் தீர்வு காணுமாறு கூறலாம். அரசியல் சாசன கோர்ட்டுகளின் நேரத்தை சேமிக்க ஏற்ற வகையில் பொது நல வழக்குகளில் விசாரணை நடத்த ஜூரி முறையை கொண்டு வரலாம்” எனவும் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT