சபரிமலை கோவில் நடை இன்று அடைப்பு 
செய்திகள்

மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததால் சபரிமலை கோவில் நடை இன்று அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பூட்டப்பட்டு சாவி மற்றும் திருவபாரணங்கள் அடங்கிய பெட்டி முறைப்படி பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாலை மலர்

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் தேதியில் திறக்கப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும்.

ஆண்டு முழுவதும் இது போல பல நிகழ்வுகளுக்காக சபரிமலை கோவிலில் பூஜைகள் நடைபெற்றாலும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் மண்டல பூஜை நிறைவடைந்தது.

அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை டிசம்பர் மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து மகர ஜோதியை தரிசனம் செய்தனர்.

மகரவிளக்கு பூஜைக்கு பிறகு நேற்று (20-ந்தேதி) இரவு வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்றிரவு வரை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு அரிவராசனம் பாடப்பட்டு இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதி மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்.

அதன்படி, காலை 6 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி காலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து சபரிமலை கோவில் நடை பூட்டப்பட்டு சாவி மற்றும் திருவபாரணங்கள் அடங்கிய பெட்டி முறைப்படி பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை மீண்டும் மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் பிப்ரவரி 13-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.