சார்க் நாடுகளின் தலைவர்கள் 
செய்திகள்

பிரதமர் மோடியின் முயற்சிக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் ஆதரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையின் பிரதமர் மோடியின் முயற்சிக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள கலபுருகி நகரில் இந்த வைரசின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போரிடுவதற்கு பலமான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சார்க் நாடுகள் தலைமைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘COVID-19 எனப்படும் கொடிய கொரோனா வைரஸ-ஐ எதிர்த்து நமது பூமிக்கிரகம் போரிட்டு வருகிறது. இதை அழிப்பதற்கு பல வழிகளில் அரசாங்கங்களும் மக்களும் தங்களால் ஆன சிறந்தவற்றை செய்து வருகின்றனர்.

உலக மக்கள்தொகையில் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டிருக்கும் தெற்காசியா கண்டம் நமது மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்காக செய்தற்கரிய காரியங்களை செய்ய வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போரிடுவதற்கு பலமான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சார்க் நாடுகளின் தலைமைக்கு நான் முன்மொழிகிறேன். நமது குடிமக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக நாம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தலாம்.

நாம் ஒன்றிணைவதன் மூலம் இந்த உலகத்துக்கு முன்னுதாரணமாக விளங்குவதுடன் ஆரோக்கியமான பூமிக்கான பங்களிப்பையும் வழங்கலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சார்க் நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்குவதாகவும், கொரோனா பற்றி ஆலோசிக்க தயாராக உள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முயற்சியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம்.

சுழற்சி முறையின்படி, பாகிஸ்தானை சேர்ந்த அம்ஜத் ஹுசைன் பி சியால் என்பவர் தற்போது சார்க் அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.