கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு வாலிபர் கடை முன்பு படுத்திருந்த காட்சி. 
செய்திகள்

காஞ்சீபுரத்தில் கோவிலில் பிச்சை எடுத்த ரஷிய வாலிபர்: கன்னியாகுமரி வந்ததாக பரபரப்பு

கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு வாலிபர் யார்? என்பதை கண்டறியவதற்காக அவரை இன்றும் 3 நாளாக போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

கன்னியாகுமரி :

ரஷியாவைச் சேர்ந்த இவாஞ்செலின் பெர்ன்கோவ் என்ற வாலிபர் தமிழகத்தில் உள்ள கோவில்களை சுற்றிப்பார்ப்பதற்காக காஞ்சீபுரத்திற்கு வந்தார்.

அப்போது அவர் தனது ஏ.டி.எம். கார்டை அங்குள்ள மையத்தில் பணம் எடுக்க பயன்படுத்திய போது தவறான ரகசிய எண்ணை பதிவு செய்ததால் அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரத்தில் உள்ள குமர கோட்டம் பகுதியில் முருகன் கோவில் வாசலில் அமர்ந்து அவர் பிச்சை எடுத்தார். இது பற்றிய தகவல் பரவியதும் காஞ்சீபுரம் போலீசார் விசாரணை நடத்தி சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தின் உதவியை கேட்கும்படி கூறி அனுப்பினார்கள்.

ஆனால் அவர் அங்குச் செல்லாமல் மாயமாகி விட்டார். இதனால் அவரை பற்றிய பரபரப்பு நீடித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஒரு வெளிநாட்டு வாலிபர் சுற்றி திரிந்தார். அங்குள்ள பூட்டிய கடைகள் முன்பு அவர் படுத்திருந்தார்.

இதை பார்த்த பொதுமக்கள் சிலர் அவர் காஞ்சீபுரத்தில் கோவிலில் பிச்சை எடுத்த ரஷிய வாலிபர் என்று சந்தேகம் அடைந்தனர். உடனே அவரை தங்களது செல்போனில் படம் எடுத்தனர். இதைப்பார்த்ததும் அந்த வாலிபர் கடும் ஆத்திரம் அடைந்தார். தன்னை படம் எடுக்க கூடாது என்று கூறி சத்தம் போட்டபடி அங்கிருந்து சென்று விட்டார்.

மேலும் அவர் கடற்கரை சாலை, சன்னதி தெரு, கன்னியாகுமரி மெயின் ரோடு மற்றும் கடை வீதிகளில் தொடர்ந்து சுற்றித்திரிந்தார். இதற்கிடையில் அவரை செல்போனில் படம் பிடித்தவர்கள் அவரை ரஷிய வாலிபராக சித்தரித்து தங்களது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் அந்த படத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

மேலும் இது பற்றி கன்னியாகுமரி போலீசார் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த வெளிநாட்டு வாலிபரை கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக தேடினார்கள்.

ஆனால் அவர் போலீசார் கண்ணில் சிக்கவில்லை. மேலும் வாட்ஸ்-அப்பில் பரவிய கன்னியாகுமரியில் படம் பிடிக்கப்பட்ட வெளிநாட்டு வாலிபர் போட்டோவையும், காஞ்சீபுரத்தில் பிச்சை எடுத்த வாலிபர் போட்டோவையும் கன்னியாகுமரி போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது அவர்கள் இருவரும் வேறு நபர்கள் என்பது உறுதியானது.

ஆனாலும் கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு வாலிபர் யார்? என்பதை கண்டறியவதற்காக அவரை இன்றும் 3 நாளாக போலீசார் தேடி வருகிறார்கள்.