செய்திகள்

சிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 7 நூஸ்ரா கமாண்டர்கள் உள்பட 49 பேர் உயிரிழப்பு

சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமான தாக்குதலில் நூஸ்ரா முன்னணியைச் சேர்ந்த 7 கமாண்டர்கள் உள்பட 49 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

மாஸ்கோ:

சிரியாவில் அதிபர் ஆசாத்தின் அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. இதில் முக்கியமான அமைப்பான அல்-நூஸ்ரா முன்னணி, அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அல்கொய்தாவுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டதாக அறிவித்தது. அதன்பின்னர் ஹயாத் தாக்ரிர் அல் ஷாம் கூட்டணி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

அரசுக்கு எதிராக சண்டையிடும் இதுபோன்ற கிளர்ச்சிக்குழுக்கள் மற்றும் தீவிரவாத நிலைகளை குறிவைத்து ரஷ்யா வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவ்வகையில், சமீபத்தில் இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நூஸ்ரா முன்னணியின் 7 பீல்டு கமாண்டர்கள் உள்பட 49 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாக அரசு ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

ரஷ்யா நேற்று வெளியிட்ட தகவலில், தாக்ரிர் அல் ஷாம் குழுவின் முக்கிய தலைவர் அபு முகமது அல் கொலனி படுகாயம் அடைந்ததாகவும், 12 கமாண்டர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. கொலனி தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.