செய்திகள்

விசா பெறுவதற்காக அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகளுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு

ரஷ்யாவில் நான்கு அமெரிக்க தூதரகங்கள் இருக்கும் நிலையில் ரஷ்யர்கள் விசா பெறவேண்டுமானால் மாஸ்கோ தூதரகத்தை மட்டுமே அனுகவேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

மாஸ்கோ:

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் பரவலாக எழுந்தது.

அதன்படி, மேற்கண்ட நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து, ரஷ்யாவில் நான்கு அமெரிக்க தூதரகங்கள் உள்ள நிலையில் ரஷ்யர்கள் விசா பெற வேண்டுமானால் மாஸ்கோ நகரில் உள்ள தூதரகத்தை மட்டுமே அனுக வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சொந்த நாட்டு மக்களையே பிரிக்கும் வேலை என ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவ் கூறியுள்ளார்.