ஆர்ப்பாட்டம் 
செய்திகள்

திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் மாவட்ட தலைவர் பத்மாவதி, செயலாளர் ரோணிக்கம், கூட்டமைப்பு மாவட்ட தலைவர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்ட பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து செவிலியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், தமிழக அரசின் சுகாதாரத்துறையில் 1510 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8620 துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய நல செவிலியர்கள் பணியாற்றி வருகிறோம்.

மத்திய, மாநில அரசுகளின் சுகாதார திட்டத்தை வீடு வீடாக சென்று சிறப்பாக சேர்த்து வருகிறோம். தமிழக அரசின் முத்துலெட்சுமி மகப்பேறு உதவி திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்ட பணியிலும் முக்கிய பங்காற்றி வருகிறோம்.

சமீப காலமாக பணிச்சுமை அதிகரித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். செவிலியர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு இல்லாததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இதனை உடனடியாக கைவிட வேண்டும். பாலின பாரபட்ச முறையை தவிர்க்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும். பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் குழு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.

தண்டனைகளும் வழங்கப்படுவதால் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அற வழியில் முதல் கட்டமாக பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.