செய்திகள்

தக்கலையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மாலை மலர்

தக்கலை:

தக்கலை அருகே முத்தலக்குறிச்சி தேவி தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி அஜிதா (வயது 31). 

அஜிதா தனது கணவரின் அண்ணன் மகள் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வந்தார். நகைக்கடையில் 3 பவுன் காப்பு, ஒரு பவுன் பிரேஸ்லெட்டை வாங்கினார். நகைகளை சூட்கேசில் வைத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார். 

நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் பஸ்சில் சென்ற அஜிதா தக்கலை பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கிய போது கையில் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 4 பவுன் நகை திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ரசலையன், ரத்தினராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அஜிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கூட்ட நெரிலை பயன்படுத்தி நகைகளை திருடி இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பெண் கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

அஜிதா நகைக்கடையில் நகை வாங்கியதை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து இந்த சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே போலீசார் நகைக்கடை மற்றும் பஸ் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews