செய்திகள்

மதுரை அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் உயிரிழந்த சமையல் தொழிலாளி: போலீஸ் விசாரணை

மதுரை அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

வாடிப்பட்டி:

மதுரை அய்யர் பங்களா திலக் நகரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 53). சமையல் தொழிலாளி. நேற்று இரவு மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பழனி செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.

அவர் பயணம் செய்த பஸ் பரவை அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ் கண்டக்டர் அவரிடம் டிக்கெட் கேட்டார். அப்போது தூங்கியபடி இருந்த வாசுதேவனை பல முறை தட்டியும் அவர் எழும்ப வில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரை மீண்டும் எழுப்ப முயன்றனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சமயநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வாசுதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.