செய்திகள்

குஜராத் சட்டசபையில் கடும் அமளி - பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை தாக்கிய காங்கிரஸ் உறுப்பினர்கள்

குஜராத் மாநில சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கியதால் கடும் அமளி ஏற்பட்டது. #gujarathassembly

மாலை மலர்

அகமதாபாத்:

குஜராத் மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை வழக்கம்போல் சட்டசபை கூடியது.

கேள்வி நேரம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர் விக்ரம் மதாம் கேள்வி ஒன்றை எழுப்பி பதிலளிக்குமாறு கோரினார். ஆனால் அவர் இருக்கையில் அமராததால் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி அவரை அமரும்படி வலியுறுத்தினார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை.

இதையடுத்து, ஜக்தீஷ் பஞ்சால் உள்ளிட்ட பா.ஜ.க. உறுப்பினர்கள் அவரை அமரும்படி கோஷமிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜக்தீஷ் பஞ்சால் இருக்கைக்கு சென்றனர். அங்கிருந்த மைக்கை பிடுங்கி அவரை தாக்கினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதைக்கண்ட சபாநாயகர் காங்கிரஸ் உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தினார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட காங். உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் துதாத் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதித்தார். #gujarathassembly #Tamilnews