பீகாரில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் அரசியல் பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியாக அறிவிக்கப்பட்ட ரூபி ராய் உள்ளிட்ட சிலர், அடிப்படை கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர்கள் என்பது உள்ளூர் தொலைக்காட்சி ‘சேனல்’கள் மூலம் அம்பலமானது.
முதலிடம் பெற்ற 14 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறாத ரூபி ராய் உள்ளிட்ட மாணவர்களின் பிளஸ்-2 தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையினர், ஜூன் மாதம் 25-ம் தேதி ரூபி ராயை கைது செய்து, பியோர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பீகாரில் இந்த ஆண்டுக்கான ‘பிளஸ்-2’ தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 30 சதவீதம் பேர்தான் தேர்ச்சி அடைந்தனர். அறிவியல் மாணவர்கள் 70 சதவீத பேரும், கலைப்பிரிவில் 76 சதவீதம் பேரும் தோல்வி அடைந்தனர்.
இந்த தேர்வில் மானுடவியல் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்ற கணேஷ் குமார் என்ற மாணவர் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இசை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் சொதப்பலாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மானுடவியலில் இசை என்பதும் ஒரு பகுதி பாடமாக உள்ளது. இசைப் பாடத்தில் கணேஷ் மொத்தமுள்ள 70 மதிப்பெண்களுக்கு 65 எடுத்து இருந்தார்.