கோப்பு படம் 
செய்திகள்

திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் ரூ.30 லட்சம் கையாடல் - வருவாய் ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை அலுவலகத்தில் ரூ.30 லட்சம் கையாடல் நடந்திருப்பது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் மூலம் முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த துறையின் பொறுப்பு அதிகாரியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உதவி கலெக்டர் முருகன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இந்த துறையில் உள்ள கணக்குகளை தணிக்கை செய்தார். அப்போது ரூ.30 லட்சம் கணக்கில் வராமல் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பயனாளிகளுக்கு காசோலை அனுப்பும் சீனியர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சமூக பாதுகாப்பு துறை மூலம் வங்கிகளில் செலுத்தப்பட்ட காசோலை குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார், சிவானந்தாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் வினோத் ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் காசோலை அனுப்பப்பட்டது தெரியவந்தது.

ஆனால் அவர்களுக்கு எந்த உதவிதிட்டத்தின் கீழ் இந்த காசோலை அனுப்பப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. அதிகாரிகளின் தீவிர விசாரணையில் சீனியர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார் ரூ.30 லட்சம் காசோலையை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி கையாடல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து உதவி கலெக்டர் முருகன், திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் சீனியர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.