கள்ள நோட்டுகள் (கோப்புப்படம்) 
செய்திகள்

பூட்டிய வீட்டில் ரூ.7¼ லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்

கோவையில் பூட்டிய வீட்டில் ரூ.7.36 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

விருதுநகர் மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி சமீபத்தில் காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை கடத்தியதாக சிவகாசியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 25) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ரஞ்சித்குமார் பீளமேடு சேரன் மாநகர் அருகே உள்ள குமரன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்கள் கோவை பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து அந்த வீட்டில் உள்ள ரஞ்சித்குமார் மற்றும் கடத்தி வரப்பட்ட சிறுமியை பிடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் பீளமேடு போலீசார் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். இதற்கிடையில் திருமயம் போலீசாரும் கோவை வந்தனர்.

அவர்கள் சென்ற பார்த்தபோது அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் கிடந்தன. மொத்தம் 368 நோட்டுகள் அதாவது 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விசாரணையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த கள்ள நோட்டுகளை கோவையில் தீபாவளி நேரத்தில் புழக்கத்தில் விடுவதற்காக திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டில் தங்கியிருந்த ரஞ்சித்குமார் தான் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தாரா? அல்லது வேறு யாராவது இந்த முறைகேட்டில் தொடர்புகொண்டுள்ளார்களா? அந்த சிறுமி எங்கே? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்ட வீட்டை சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவர் காலி செய்து விட்டு சென்றார். அதன்பின்னர் ரஞ்சித்குமார் ஒரு வாரத்துக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி குடியிருந்துள்ளார். எனவே அவருடன் அந்த சிறுமி இருந்தாரா? அதுகுறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

சிறுமியை தேடி வந்த இடத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் கிடைத்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.