செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து சரத்யாதவ், அலி அன்வர் அன்சாரி தகுதி நீக்கம்

மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து துணை ஜனாதிபதி வெங்கையா உத்தரவிட்டார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து துணை ஜனாதிபதி வெங்கையா உத்தரவிட்டார்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல்-மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

லாலு குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. ஊழல் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்தது. தேஜஸ்வி பதவி விலகவேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியும், அவர் பதவி விலகாததால் நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். அவரது முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்து, லாலுவுடன் கூட்டணி குறித்து பேசினார்.

இதற்கிடையே, மாநிலங்களவை கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவை ஐக்கிய ஜனதா தளம் கட்சி நீக்கியது. அறிவித்துள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த எதிர்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. அலி அன்வர் அன்சாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மக்களவை தலைவர் ஆர்.சி.பி.சிங், பாராளுமன்றத்தின் மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுவிடம் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 10-ன் கீழ் சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை மாநிலங்களவை செயலர் அதிகாரபூர்வமாக நேற்று வெளியிட்டார்.