செய்திகள்

மு.க.ஸ்டாலினை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்- ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் என்று ஆர். எஸ்.பாரதி எம்.பி.பேசினார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 65-வது பிறந்த நாளையொட்டி தஞ்சை நகர இளைஞரணி சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று ரத்த தான முகாம் நடந்தது.

தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார். மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிக்கொண்டான், செயற்குழு உறுப்பினர் து.செல்வம், அவை தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மருத்துவரணி அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி, செந்தில்குமார், கமலா, ரவி, மாவட்ட பிரதிநிதிகள் நீலகண்டன், சிந்தனை செல்வன், உஷா, புருசோத்தமன், மணி, குணசேகரன், செந்திலரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கடந்த 1-ந் தேதி முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளது. எடப்பாடி அரசு மைனாரிட்டி அரசாக இருந்த காலம் போய் இப்போது மத்திய அரசும் மைனாரிட்டி அரசாக உள்ள நிலை இருந்து வருகிறது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews