ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து நேற்று சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரண்பாடாக பதில் சொன்னார். எனவே சந்தேகத்தின் பேரில் அவரை தனி அறையில் வைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் சென்னையை சேர்ந்த முகமது (26) என்பதும் அவருடைய உடம்பில் ரூ. 8 லட்சம் மதிப்புடைய 235 கிராம் தங்கத் துண்டுகளை ரப்பர் ஸ்பாஞ்சுக்குள் வைத்து மறைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.
மருத்துவக் குழுவினர் உதவியுடன் உடலுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கம் வெளியில் எடுக்கப்பட்டது.