செய்திகள்

கலப்பட புகார் எதிரொலி: ரூ.6 கோடி ஜவ்வரிசி பறிமுதல்- 5 குடோன்களுக்கு சீல்

கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட புகாரின்பேரில் நடந்த சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான 11 ஆயிரம் ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 குடோன்களுக்கு அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.

மாலை மலர்

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி குடோன்களில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுவதாகவும், அவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட ஜவ்வரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் எழுந்தது.

இதன்பேரில் நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 4 குழுக்களாக பிரிந்து நாமகிரிப்பேட்டை வட்டாரம், ராசிபுரம் வட்டாரம் மற்றும் வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 8 ஜவ்வரிசி குடோன்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த 8 குடோன்களில் வைக்கப்பட்டு இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான 11 ஆயிரம் ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜவ்வரிசி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கலப்படம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல அந்த பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறையின் விதிமுறைகளை கடைபிடிக்காத 5 ஜவ்வரிசி குடோனுக்கு “சீல்” வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த சோதனை தொடரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.