திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்று ஐகோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தி.மு.க. செய்தி தொடர்பாளர் இளங்கோவன் எம்.பி., சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பிடிபட்டது. இந்தப் பணம் கோயம்புத்தூரில் இருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த பணத்துக்கு வங்கி நிர்வாகம் சொந்தம் கொண்டாடியது. ஆனால், கன்டெய்னர் லாரி பிடிபட்ட போது பணத்துக்கான ஒரிஜினல் ஆவணங்களை வங்கி நிர்வாகம் அளிக்கவில்லை. இந்த பணம் சம்பந்தமாக ஸ்டேட் வங்கியும், ரிசர்வ் வங்கியும் முன்னுக்குப்பின் முரணான பதில் களைக் கூறிவருவதால் இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டார். மேலும், விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.