திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. ஆடுகள் மட்டுமின்றி கோழி, சேவல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஆட்டுச்சந்தை என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதனை வாங்குவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். கடந்த மாதம் புரட்டாசி என்பதால் ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் இன்று கூடிய சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
நேற்று இரவே பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்தனர். 8 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.3800 வரை விற்பனையானது. ஆனால் இன்று அதே ஆடு ரூ.6500 வரை விலை அதிகமாக வாங்கப்பட்டது. மேலும் கோழி ரூ.350 வரையிலும், சேவல் ரூ.2000 முதல் ரூ.15ஆயிரம் வரையிலும் விலைக்கு வாங்கப்பட்டது.
ஏராளமான வியாபாரிகள் வந்திருந்ததால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. இன்று ஒருநாள் மட்டும் ரூ.5 கோடிக்கு மேல் விற்பனையானது.
அய்யலூர் ஆட்டுச்சந்தையில் முதல்நாளே வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு எந்தவித வசதிகளும் இல்லை. குடிநீர், மின்விளக்கு வசதிகூட இல்லாததால் பல வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிக வருவாய் ஈட்டித்தரும் இந்த சந்தைக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலையில் சந்தை கூடும் சமயத்தில் இப்பகுதி வழியே வாகனங்கள் செல்லவும் மிகுந்த நெருக்கடியான நிலை ஏற்பட்டு வருகிறது.