மணப்பாறை:
தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும்.
இந்த சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச்செல்வார்கள். கறவை மாடுகள், உழவு மாடுகள், நாட்டுப் பசுக்கள் என ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும்.
இது மட்டுமின்றி செவ்வாய் மாலை தொடங்கி புதன் கிழமை மதியம் வரை சுமார் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும்.
ஆனால் தற்போது கால்நடை சந்தைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி மாட்டிறைச்சிக்கும் கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய அரசின் தடை உத்தரவால் எப்போதும் பரபரப்பாக களை கட்டி காணப்படும் மணப்பாறை மாட்டுச்சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் குறைந்த அளவிலான வருகையால் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் அங்கு மாடுகளின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணி சொல்லும் அளவில் தான் இருந்தது. இதனால் விவசாயிகள் பலரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மாடுகளை போதிய விலையின்மையாலும், யாரும் கேட்க முன் வராதாலும் மன வேதனையுடன் திரும்பிக் கொண்டு சென்றனர்.
விவசாயிகள் தங்களின் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை தங்களுக்கு நேரும் அவசரத் தேவைகளின் போது அவற்றை விற்று தான் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால் நேற்று சந்தைக்கு மாடுகளை விற்க வந்த பல விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்க முடியாமல் திரும்பிக் கொண்டு சென்றனர்.
இதே போல் வியாபாரிகளின் வருகையும் வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் மனித தலைகளாக காட்சி அளிக்கும் மணப்பாறை மாட்டுச்சந்தை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வர்த்தகமும் சுமார் ரூ.4 கோடி வரை வெகுவாக பாதிக்கப்பட்டது.
புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.