கோப்புபடம் 
செய்திகள்

ஆரல்வாய்மொழியில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து ரூ.3¼ லட்சம் பறிமுதல்

ஆரல்வாய்மொழியில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து ரூ.3¼ லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி சப்- இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு தலைமையிலான போலீசார் தேவசகாயம் மவுண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் இருவரையும் ஆரல்வாய் மொழி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்தது சித்திரங்கோடு பகுதியைச் சேர்ந்த பாபு ஷாகுலின் (வயது 30), கோட்டாரைச் சேர்ந்த பேச்சி (32) என்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் செண்பகரா மன்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்ததாக தெரிவித்தனர்.

போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ.3 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சிறுவர்களை நெல்லை சீர்திருத்தப்பள்ளியிலும், பாபு ஷாகுலின், பேச்சி இருவரையும் நாகர்கோவில் ஜெயிலிலும் அடைத்தனர்.