செய்திகள்

ஆம்பூர் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி - 3 பேருக்கு வலை

ஆம்பூர் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் கடந்த 2014-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை தொடங்கப்பட்டது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது போன்ற பல்வேறு கவர்ச்சி சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து, ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர், இந்த வங்கியில் கணக்கு தொடங்கி நகைக் கடன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் கடன் பத்திரங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

அப்போது, ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் சரவணன் (வயது 42) மற்றும் பெரியாங் குப்பத்தை சேர்ந்த பூபாலன் மகன் சக்திவேல் (42) ஆகிய 2 பேரும் அடகு வைத்து கடன் பெற்ற நகைகள், கவரிங் என கண்டறியப்பட்டது.

இவர்கள் 2 பேரும், கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளனர். இதற்கு வங்கி நகை மதிப்பீட்டாளரான சவராஷ்டிரபுரத்தை சேர்ந்த சுந்தரன் மகன் சதீஷ் (35) கமி‌ஷன் பணத்திற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, வேலூர் எஸ்.பி. பகலவனிடம் வங்கி மேலாளர் விஷ்ரா புகார் அளித்தார். புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆம்பூர் டவுன் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி, கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்த 2 பேர் மற்றும் உடந்தையாக இருந்த நகை மதீப்பீட்டாளர் சதீஷ் ஆகிய 3 பேர் மீதும் மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக உள்ள அவர்கள் 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இதுதவிர வங்கியில் வேறு ஏதாவது போலி நகைகள் அடகு வைக்கப்பட்டு பல லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.