கொள்ளை 
செய்திகள்

கோவையில் தங்க நகை வியாபாரியிடம் போலீஸ் என கூறி ரூ.24 லட்சம் நகை கொள்ளை

கோவையில் தங்க நகை வியாபாரியிடம் போலீஸ் என கூறி ரூ.24 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

கோவை:

பொள்ளாச்சியை சேர்ந்தவர் சின்னையா(வயது 55). தங்க நகை வியாபாரி. இவர் பொள்ளாச்சியில் இருந்து தங்க கட்டிகளை எடுத்து கொண்டு கோவை வந்து செல்வபுரத்தில் உள்ள தங்கநகை பட்டறையில் கொடுத்து ஆபரணங்களாக மாற்றி வாங்கி செல்வது வழக்கம்.

நேற்று பொள்ளாச்சியில் இருந்து தங்க கட்டிகளை எடுத்து கொண்டு கோவைக்கு பஸ்சில் வந்தார். பின்னர் உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து செல்வபுரத்தில் உள்ள தங்கநகை பட்டறைக்கு சென்றார். பின்னர் தான் கொண்டு வந்த தங்க கட்டியை நகை பட்டறையில் கொடுத்தார்.

பின்னர் அங்கு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 650 கிராம் தங்க நகைகளை வாங்கி கொண்டு ஊருக்கு செல்வதற்காக உக்கடத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோ பெரிய கடைவீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே வந்தபோது 2 மர்ம நபர்கள் வழிமறித்தனர். அவர்கள் ஆட்டோவில் இருந்த சின்னையாவிடம் தாங்கள் போலீசார் என்றும், நீங்கள் வைத்துள்ள பேக்கில் என்ன இருக்கிறது. அதனை திறந்து காட்டுங்கள் என்றனர்.

இதையடுத்து அவர் பேக்கில் தங்க நகை இருப்பதாக கூறி அதனை திறந்து காட்டினர். பின்னர் அவர்கள் அதற்கான ஆவணங்களை கேட்டனர். சின்னையா அதற்கான ஆதாரங்களை காட்டினார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் நீங்கள் செல்லலாம் என்று கூறினர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்து சிறிது தொலைவில் சென்றபோது சின்னையா தான் வைத்திருந்த பேக்கை திறந்து பார்த்தார். அப்போது பேக்கில் வைத்திருந்த ரூ.24 லட்சம் மதிப்பிலான நகையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியான அவர் தான் மறந்து போய் நகையை கடையில் வைத்து விட்டோமோ என்று நினைத்து மீண்டும் செல்வபுரத்தில் நகைபட்டறைக்கு சென்றார். அங்கு சென்று நான் நகையை இங்கு மறந்து வைத்து விட்டு சென்றதாக கூறினார். ஆனால் அவர்கள் நீங்கள் நகையை வாங்கி விட்டு போய் விட்டீர்கள் என்றனர்.

இதனால் பதறிப்போன அவர் தனது நகை என்னவானது என தெரியாமல் விழித்தார். அப்போது தான் வழியில் தன்னை வழிமறித்தவர்களின் ஞாபகம் வந்தது.

அவர்கள் தான் என்னிடம் போலீஸ் என கூறி விசாரணை நடத்துவது போல் பேசி நகையை திருடி சென்றிருக்க வேண்டும் என சந்தேகித்தார். இதுகுறித்து சின்னையா பெரியகடை வீதி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.