செய்திகள்

ரூ. 2000 கோடி மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் மதுரை நிதிமன்றத்தில் சரண் அடைந்தார்

தமிழகம் மற்றும் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி 2000 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிதி நிறுவன உரிமையாளர் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

மாலை மலர்

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மத்தம்பாலையில் நிர்மலன் என்பவர் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். குமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த நிதி நிறுவனத்தில் பண முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேரிடம் 2000 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாபக குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும், கேரள போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நிதி நிறுவன இயக்குனர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். நிதி நிறுவன அதிபர் நிர்மலன் தலைமறைவானார். அவரைத் தேடும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில், நிதி நிறுவன அதிபர் நிர்மலன், மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.

நிதி நிறுவனம் மற்றும் நிர்மலனின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி ஏராளமான தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.