செய்திகள்

அம்மாபேட்டை பகுதியில் டெங்கு ஆய்வு: திருமண மண்டபத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த திருமண மண்டபத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் தடுப்பு பணியில் கலெக்டர் அண்ணாத்துரை தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மாவட்டம் முழுவதும் அதிரடி ஆய்வு நடத்தி கடைக்காரர்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் ஆகியோருக்கு டெங்கு அபராதம் விதித்து வருகிறார். தஞ்சை மாவட் கலெக்டர் அம்மாபேட்டை ஊராட்சி பகுதிகளில் இன்று டெங்கு ஆய்வு நடத்தினார்.

அப்போது அம்மா பேட்டை வெள்ளாளர் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை ஆய்வு செய்தார். அங்கு தண்ணீர் தொட்டியில் கொசுக்கள் உற்பத்தியாகி இருந்ததை கண்டார்.

இதைதொடர்ந்து டெங்குவை பரப்பும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக கூறி திருமண மண்டப உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் அப்பகுதியில் வீடு- வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வையும் கலெக்டர் ஏற்படுத்தினார். அவருடன் ஆர்.டி.ஓ. சுரேஷ், தாசில்தார் தங்க பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.