பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள். 
செய்திகள்

தென்காசியில் ரூ.16 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்- 4 பேர் கைது

தென்காசியில் ரூ.16 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

தென்காசி:

தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் போலீசாருடன் தென்காசி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக 3 இருசக்கர வாகனங்களுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது இருசக்கர வாகனங்களை சோதனை செய்தனர். அதில் வாகனங்களின் முன்பகுதியில் உள்ள பெட்ரோல் டேங்க் கவர்களில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, அது கள்ள ரூபாய் நோட்டுகள் என்றும், ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என்றும் கூறினார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தென்காசி ஜமாலியா நகரை சேர்ந்த இஸ்மாயில் மகன் முகம்மது பாதுஷா (வயது 40), புளியங்குடி டி.என்.புதுக்குடி பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் வீரகேசவ சொக்கலிங்கம் (30), நெல்லை சங்கர்நகர் கணபதி மில் சாலை பகுதியை சேர்ந்த கணேசன் மகன் மாரி செல்வராஜ் (35), பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நாடார் தெருவை சேர்ந்த சுடலை ஈசன் (50) என்பதும் தெரியவந்தது.

போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கள்ளரூபாய் நோட்டுகள் 15 லட்சத்து 91 ஆயிரத்து 400 மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.