ஆரணி:
ஆரணி அடுத்த மேல் சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி மகன் சந்திரசேகர் (வயது 55). நெசவுத் தொழிலாளியான இவர், தற்போது ஆரணி டவுன் பாரதியார் நகரில் வசிக்கிறார். இந்த நிலையில், நேற்று சந்திரசேகர் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
ஆரணி தச்சூர் ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் ரூ.72 ஆயிரத்தை செலுத்தி அடகு நகைகளை மீட்டார்.
பிறகு, மீதமுள்ள ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்துடன் ஆரணி சத்திய மூர்த்தி சாலையில் உள்ள தனியார் வங்கியில் அடகு நகைகளை மீட்க சென்றார்.
அந்த வங்கிக்கு செல்லும் வழியில் ஒரு கடை முன்பு நிறுத்தி பணத்தை பெட்டியில் வைத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.28 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருந்தனர்.
இது குறித்து, சந்திரசேகர் ஆரணி டவுன் போலீசில் இன்று காலை புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.