ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த கிருஷ்ணவேணி(வயது 43) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு வந்திருந்தார்.
கிருஷ்ணவேணி மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் தங்க வளையல்கள் மற்றும் தங்க சங்கிலி மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்புள்ள, 400 கிராம் தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து கிருஷ்ணவேணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.