சென்னை:
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராத கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கான அபராத தொகை ரூ.100-ல் இருந்து ரூ.1000-ஆக உயர்த்தப்பட்டது.
குடிபோதையில் வாகனம் ஒட்டுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரையில் விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
குடிபோதையில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு இந்த 2 அபராத கட்டணமும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் லைசென்ஸ் இல்லாமல் ஒருவர் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளையோ, காரையோ ஓட்டிச் சென்றால் ரூ.15 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கும் மிக அதிகமாக அபராதம் விதிக்கும் வகையிலேயே மோட்டார் வாகன சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 1-ந்தேதி இது அமலுக்கு வந்தது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் போக்குவரத்து போலீசார் இதனை அமல்படுத்தாமல் உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில் புதிய அபராத வசூல் முறையை அவர் தமிழகம் திரும்பிய பிறகே போக்குவரத்து போலீசார் அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த புதிய சட்டதிருத்தம் தொடர்பாக முதல்வர் கையெழுத்திட்டு அரசாணை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும், அதன் பிறகே தமிழகத்தில் புதிய முறையின்படி அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். ஆனால் கோர்ட்டில் நீதிபதிகள் புதிய சட்டதிருத்தத்தின்படி அபராதம் விதித்து வருகிறார்கள்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடிபோதையில் லைசென்ஸ் இல்லாமல் வாகன ஓட்டியவருக்கு ரூ.15 ஆயிரமும், போதையில் வண்டியை ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. எழும்பூர் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. இதே போல கோவையிலும் போதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு கோர்ட்டில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை காட்டூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது 3 பேர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இவர்கள் 3 பேருக்கும் புதிய வாகன சட்ட விதிகளின் படி தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போல் சரவணம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச்சென்ற 2 பேருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.